வெள்ளி, 2 ஜனவரி, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ச ) Othimalai Devine Secrets and its Devine Journey (4)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ச )
Othimalai Devine Secrets and its Devine Journey (4)
கொங்குநாட்டு தமிழ் கேட்க மிகவும் இனிமையாக இருப்பதாலோ என்னவோ அங்கு முருகவேல் அதிகமாக கோயில்கொண்டு அருள்கின்றார்.
"அம்மணி " என்று அழைத்து ஒரு யோகியை அந்த கிராம மக்களுக்காக அளித்தார் அல்லவா?
இப்போது அந்த ஈசனுடைய மற்றொரு திருவிளையாட்டை பார்ப்போம். இதுவும் நிகழ்ந்தது சமீபமே. நாயன்மர்களைப்போல் இறைவனிடம் வெறித்தனமாக ஆழ்ந்த பக்தி செலுத்துபவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்களா; அந்த பரம்பொருளான ஈசன் இப்போதும் வந்து அருள்பாலிக்கின்றானா என்ற ஒரு ஐயம் எழுவதுண்டு அல்லவா!
உண்மையான, தீவிரமான பக்தர்கள் இன்னமும் இருகிறார்கள் ஈசனும் அருள்பாலித்துக்கொண்டுதான் இருக்கின்றார்.
சரவணப்பட்டியில் உறையும் ஈசனையும், அம்மன் கோயிலில் ஆட்சிபுரிந்துவரும் பத்ரகாளி ஆத்தாளையும் பூசை செய்துவருவது "கோ " வம்சத்தில்வந்த இராமசாமி பூசாரியின் குடும்பம் ஆகும் .
குழந்தை இல்லாதிருந்து ஆத்தாளிடமிருந்து கேட்டார் ஒரு குழந்தையை. ஆத்தாள் மனமிரங்கி ஒரு ஆண் மகவை கொடுத்தார். ஆத்தாளின் அருளால் பெற்றதால் "காளிதாசு" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். குழந்தையும் நன்றாக விளையாடி வளர்ந்து வந்தது. 5ஆம் வயதில் குழந்தைக்கு கடும் குளிர்காய்ச்சல் வந்து மிகவும் பாதித்தது. குழந்தையின் நிலை நாளுக்கு நாள் மிகவும் கவலைக்கிடமாகிக் கொண்டிருந்தது. சரவனப்பட்டியில் வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் இனி எங்களால் எதுவும் செய்வதற்கில்லை, வேறு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறிவிட்டனர். இராமசாமி குடும்பத்தினர் மனம் நொந்து கோயம்புத்தூர் அழைத்துபோய் மருத்துவம் பார்த்தனர்
அங்கு நிலைமை மிகவும் சீர்கேடுற்றதால் பெரிய பொது மருத்துவமனை மருத்துவர்கள் இனி எங்களால் ஒன்றும் இயலாது வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுங்கள் என்று கூறி போகசொல்லிவிட்டார்கள். ஆம் உண்மையாகவே குழந்தையை எடுத்து போட்டுகொண்டு வந்தார்கள். அன்று ஈசனுக்கு உகந்த நாள். மக்கள் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆலகால நஞ்சை எடுத்து உண்ட நாள் அதாவது திருநீலகண்டன் ஆன நாள் (குறையில்லா நாள் - பிரதோசம்). சிரவணமாபுரீச்சுரர் ஆலையத்தில் பக்தர்கள் வரதுவங்கிவிட்டார்கள் இராமசாமி பூசாரிதான் பூசை செய்யவேண்டும். குழந்தையை கோயிலில் இருள் சூழ்ந்த ஒர் மூலையில் கிடத்தி போட்டுவிட்டு பூசைக்கு களங்கம் வராத வகையில் மூடிவிட்டு அய்யனுக்கு பூசையை செய்ய வந்துவிட்டார். காலனை காலால் உதைத்த ஈசனின் கோயில் வளாகம் அல்லவா அது. சரவனப்பட்டியின் அருகில்தான் இயமனுக்கு சக்தியருளிய திருத்தலம் "காலகொலேசுவரர்" உறையும் கோயில்பாளையம் உள்ளது.
பூசாரி அய்யனின் பூசையில் ஆழ்ந்தாலும் ஒரேமகன் அதுவும் தவம்கிடந்து பெற்றது அல்லவா! மனம் துக்கத்தில் திருமுழுக்கு செய்துகொண்டே வேண்டினார் பூசாரி இராமசாமி. "உனக்கு, எனக்குப்பின் மணியடிக்க இந்த வம்சத்தில் ஆள் இல்லை ஆதலால் உனக்கு பூசை செய்ய ஆள்வேண்டுமானால் குழந்தையை கொடு என்று வேண்டினேன் என்றார் பூசாரி எங்களிடம். திருமுழுக்கு அனைத்தும் முடிந்தது, அலங்காரமும் ஆகிவிட்டது, தீபாராதனை செய்தார் இராமசாமி, என்ன வியப்பு "மணி ஒளி" கேட்டு திரும்பிப்பார்த்தார் பூசாரி அங்கு மணி அடித்துகொண்டிருந்தான் "காளிதாசு" . பூசாரிக்கு இறைவன் தெரியவில்லையாம் கண்களில் நீர் மறைத்து விட்டதாம். உங்களுக்கும் இதுபோல் எதாவது நிகழ்ந்திருக்கும் , எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இறைப்பேராற்றலின் அருள்தன்மை எல்லோருக்கும் தெரியட்டும் .
... பயணம் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக