செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (அ) Othimalai Devine Secrets and its Devine Journey (8)

 ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (அ)
Othimalai Devine Secrets and its Devine Journey (8)

தமிழ்நாட்டில், மற்ற மாநிலங்கலைவிட  நடைவலம் (பாதயாத்திரை) என்ற பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது.   மலைவலம்(கிரிவலம்), திருக்கோவில் வலம் வருதல், நவக்கோள்வலம்  போன்ற பழக்க வழக்கங்களும் மிக அதிகமாகவே உண்டு என்பதை நாம் அறிவோம்.   நடைவலம் சற்று கடுமையான உடற்பயிற்சி மட்டுமல்லாமல் அவரவர் பக்திக்கு வித்தாகவும், பலருக்கு யோகவெற்றியாகவும் அமைகிறது.  இறை நினைவுடன் ஆற்றும் நடைவலத்தால் இறைவனை உணரமுடியும்.   இங்கு ஒருவருக்கு ஒருவர் உதவ நேருகிறது, பக்தி மேலிடுகிறது.  இறைவனே வந்து உதவினார், தண்ணீர் பந்தல்வைத்தும், பொதி சோறு கொடுத்ததும் நாம் அறிந்ததே.  இறைவனும் இறைவியும் வேடர்களாக வந்து சமைத்து அறுசுவையுடன் சுந்தரருக்கு பரிமாறியதை சிறப்பாக உணரலாம்.  பின்வரும் பகுதிகளில் குருநமச்சிவாயருக்கு  உண்ணாமுலை தாயார் பலமுறை இலைபோட்டு பரிமாறினார் என்பதும் அறியப்பட்டதே,  ஆனால் இப்பொழுது பழனிக்கு நடைவலம் செல்லும்போது நடந்த உண்மைச்சம்பவத்தை பார்போம்.  திருச்செந்தூர், திருப்பதி, மருவத்தூர் போன்ற தளங்களுக்கும் நடைவலம் செல்வதுண்டு.   ஆனால் பழநிமலைக்கும், ஓதிமலைக்கும் நெருக்கம் அதிகம் ஏனெனில்,  அருள்நிறை போகர் சித்தராக ஓதியப்பன் முத்திரை வைத்து பழநிக்கு சென்று என்னை வழிபடு என்று அனுப்பியதாலோ என்னவோ.  இது ஓதிமலை தலவரலாறு பிறகு பார்போம்.

பழநிமலைக்கு சரவணப்பட்டி, அம்மன் கோவில் பகுதி மக்கள் இணைந்து "தைப்பூச காவடிக்குழு"  என்ற அமைப்பு 100க்கும் மேற்பட்ட அன்பர்களுடன்    நடைவலமாக  (பாதயாத்திரை) செல்வது வழக்கம்.   ஆண்களும் பெண்களுமாக செல்வார்கள் அவர்களில் ஒரு இளைஞர் நடந்துவருவதாக முருகனிடம் உறுதியெடுத்துகொண்டு வந்தான்.

சரவணப்பட்டி எல்லைவரை மேள தாளத்துடன் குடும்பத்தினர் அனைவரும் வந்து தண்ணீர் கொடுத்து வழி அனுப்புவார்கள்.  பலர் காவடியுடனும் வருவார்கள்.    இது கண்களுக்கும், செவிக்கும் மிகவும் இனிமையாக இருக்கும்,  "ஆறுமுக ஐயா" என்பவர் வழிநடத்தி செல்லும் பயணமாக இருந்தது சிறப்பாகும்.  இரவில் தங்குவதற்கும் ஆங்காங்கே உணவருந்தி இளைப்பாறி செல்ல அன்புள்ளம் கொண்ட அன்பர்களின் தோட்டங்களில் ஏற்பாடு செய்திருப்பார்கள்.  நடைவலமாக  செல்கையில் 5 அல்லது 6 தோட்டங்களில்  தங்க ஏற்பாடுகள் செய்திருப்பார்கள்.  நம் இளைஞ  நண்பர் மிகுந்த மகிழ்வுடன் எல்லோரிடமும் விளையாடிக்கொண்டு ஆட்டம்பாட்டுடன் வலம் வந்துகொண்டிருந்தார், அவனிடம் முருகன் அருளூட்டம் செய்து  விளையாட துவங்கிவிட்டான்.  (காவடி எடுத்து செல்பவர்களுக்கு என்றும் இனியவனாகிய முருகனின் விளையாட்டு நன்றாகவே புரியும்).   இளைஞர் துவளும் நிலைக்கு உட்பட்டார், நடை தளர்ந்து முதலில் சென்றவர் கடைசீயில் வரவேண்டியவரானார்.     "ஆறுமுக ஐயா"  அன்புடன் "காரிப்பட்டி ஐயா" என்ற பெரியவர் தலைமையில் அனைவரையும் அழைத்துவந்தார்.  அந்த பெரியவர் சுற்றிக்கொண்டு முதலிலும் கடைசியிலும் கண்காணித்து வருவார்.

இளைஞர் சற்று பருமனாக இருந்ததால் கால்களில் இப்பொழுது கொப்புளங்கள் உருவாகியதால் மிகவும் வருந்தினார், முயற்சியை விடாமல் முருகனை நம்பி மிகவும் சிரமப்பட்டு நடந்தான்.  முருகனுக்கு அவனுடன் விளையாட ஆசை.  கால்களில் உள்ள  கொப்புளங்கள் உடைந்து ஒரு அடிகூட எடுத்துவைக்க இயலாமல் மிகவும் துயருற்றான்..கூட வந்த நண்பர்களின் தோல் மேல் கைபோட்டுகொண்டு இப்போது நடக்க துவங்கி அதுவும் முடியாமல் போகவே உட்கார்ந்து அமர்ந்தவரே நடந்தான்.   கூடவே வந்துகொண்டிருக்கும் வண்டியில் (வேனில்) ஏறிவர மனம் இடம் கொடுக்கவில்லை.

முருகனிடம் நடந்து வருவதாக வாக்கு கொடுத்தான் அல்லவா  அதனால் வண்டியில் செல்ல விருப்பமில்லை.  கால்களில் துணிகளை கட்டிக்கொண்டும் முயன்றான்,  மீண்டும் வலியும் மயக்கமும் ஆட்கொண்டது  தன்னுடன் வந்தவர்களை போகசொல்லிவிட்டு, ஓர் பெரிய மரத்தடியில் அமர்ந்துவிட்டான்.  காலில் உடைந்த கொப்புளங்களில் இருந்து குருதியும் கொட்ட துவங்கியது.   இப்பொழுது ஒருபுறம் நடந்து செல்ல இயலாததால் கோபமும் வந்த நேரத்தில் அந்த பெரியவர்  "காரிப்பட்டி ஐயா" வந்து சேர்ந்தார்.  முதலில் பரிகாசமாக பேசி கூட வரச்சொன்னார்,  அதற்கு இளைஞர் மறுத்துவிட்டார்.  பெரியவர் விடவில்லை  மீண்டும் மீண்டும் அழைத்தார்.

பெரியவராக  "காரிப்பட்டி ஐயாவாக " வந்திருப்பது வேலவன் என்பது அப்போது தெரியுமா இளைஞனுக்கு.  தமிழ்மூதாட்டி அவ்வைக்கே தெரியவில்லையே முதலில்  - சுட்டபழம் வேண்டுமா! சுடாத  பழம் வேண்டுமா! என்று கேட்டபோது.

இளைஞர் மிகுந்த சினத்துடன் பெரியவரிடம் நீங்கபோங்க ஐயா என்று கூறி  என்னை தொந்தரவு செய்யாதீர் என்றான்.  முருகன் விடவில்லை,  ஒரு கோலை காண்பித்து  "இதைப்பிடி " என்று அழுத்தமாக (கர்ஜித்தார்)  கூறினார்.  அவ்வளவுதான் மிரண்டுவிட்ட அந்த இளைஞர் வேறுவழியின்றி  வேண்டாவெறுப்பாக கொம்பை பிடித்தான்.

அய்யன் அருள்விளையாட்டை அவன் அருளால் அடுத்த பதிவில் நிகழும் ....
https://www.facebook.com/groups/othimalaikamukkam/permalink/521846037955189/