வியாழன், 22 ஜனவரி, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (எ ) Othimalai Devine Secrets and its Devine Journey (7)






ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (எ )
Othimalai Devine Secrets and its Devine Journey (7)










பொதுவாக 'பூ' வரம் கேட்கும்போது, மிகுந்த பக்தியுடனும் பணிவுடனும் கேட்கவேண்டும்.  அந்த பரம்பொருளிடம் நேரிடையான கோரிக்கையல்லவா ? நாமே சில உதிரிபூக்களை கொண்டுசென்று கொடுக்கவேண்டும்.  நம் கோரிக்கையை நாமே வைக்கவேண்டும்.  உத்தரவுவரும் வரை மண்டியிட்டுக்கொண்டு அய்யனிடம் அன்பொழுக கேட்கவேண்டும்.  அப்படித்தான் ஓதிமலையில் கேட்பது தொன்றுதொட்டு வழக்கம்.

அப்படி அம்மன்கோயில் ஆத்தாளையும் கேட்டார் , எங்கள் நண்பர்.

பரம்பொருள் எவ்வடிவமாக இருந்தபோதிலும், நமக்கு நம் கோரிக்கைக்கு சரியான பதில் அளிக்கப்படுகிறது உண்மை அதை நம்மால்தான் புரிந்துகொள்வது இயலாமல் போகிறது. இடப்புறம், வலப்புறம், நிலைத்து நிற்பது என்ற எல்லைக்குள் நம்பிக்கையை வைத்துகொண்டிருக்கிறோம்.

இப்பொழுது ஆத்தாள் அளித்தவரம் புதுமையாக இருந்தது.  பூ  இடப்பக்கம் விழுந்து..இடுப்புவரை வந்தவுடன் பலப்பக்கம் திரும்பி விழுந்தது எங்களுக்கு ஒன்றும் புரியாத நிலைக்கு தள்ளியது.

நண்பரின் மகன் மதிப்பெண் குறைவால் தேர்வுபெறவில்லை என தெரிந்தது. மிகவும் வருந்தினர் நண்பர்.  அடுத்தவாரம் மிகுந்த முயற்சியுடன் பயிற்சிசெய்து தேர்வெழுதி தேறினார், நல்ல வேலையும் கிடைத்தது.  இப்போது புரிந்தது ஆத்தாளின் பதில்.

பரம்பொருள் நமக்கு எல்லாவற்றையும் சரியாகத்தான் தெரிவிக்கிறது இருந்தும் நம்மாள்  புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை என்பதுதானே சரி.

ஆத்தாவின் சிலைவடிவம் ஒதிமலையிலிருந்து வந்தது என்று ஒரு செவிவழி செய்தியும் உள்ளது.   இந்த ஆத்தாவின் சன்னிதியிலிருந்துதான்  முதன் முதலில் பாதயாத்திரை தொடங்கியது.

'பூ' வரம் என்றாலே ஓதிமலை பற்றி ஒரு துகள்

ஆரூரில் பிறக்க முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி,  அண்ணாமலையை நினைக்க முக்தி இவை நாம் கேள்விப்பட்டது.  முக்திதலங்கலாக இன்னும் பல தலங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள்.   ஓதிமலையில் நம்கால் பட்டால் முக்தி ஏற்படும்.  அருளாளர் அருணகிரிநாதர் கூறிய கூற்றுப்படி இருகாதுகளிலும் ஓங்காரத்தை (பிரணவத்தை) திருவாய்மலர்ந்த (உபதேசித்த) ஓதியப்பன் நமக்கு அதாவது இந்த ஜீவ ஆன்மாவாகிய நமக்கும் திருவாய்மலர்ந்து வழிகாட்டி, நம்மையும் அந்த பரமாத்மாவுடன் இணையவைப்பார்.  ஒவ்வொரு ஆன்மாவும் சித்தநிலை அடைந்தவுடன் ஒதிமலையில் ஓதியப்பன் அந்த  'சித்தர்' என்ற  நிலை அருள் பாலிக்கிறார் என்று ஏடுகள் கூறுகிறது.  இம்மலை பொதிகைக்கு ஒப்பானது என்று தெரிவிக்கும் பிருகு, நந்தி, அகதியமுனி ஜீவ நாடியில் கூறியிருக்கிறது.

இது ஓர் துகள். விளக்கமாக மற்ற தெரியாத புதைந்த விவரங்களை பின்வரும் பகுதிகளில் அன்பர்களின் விருப்பத்தை தொடர்ந்து பார்போம் .

*  முதலில் இருக்கும் படம் அய்யன் சடையப்பர் ஜீவசமாதி , இரண்டாவது படம் ஆத்தாள் முன்றாவது இருப்பது இராசாமி பூசாரி நான்காவது அய்யன் காளிதாசு,  ஆத்தாள் பூசாரி  *


இப்பொழுது ஓர் அழகான அய்யனின் நேரிடை நிகழ்ச்சியை பார்போம் ...அடுத்த பதிவில் ...

வியாழன், 15 ஜனவரி, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ச) Othimalai Devine Secrets and its Devine Journey (6) பொங்கட்டும் பொங்கல்அய்யன் அருள் போல!









ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ச)
Othimalai Devine Secrets and its Devine Journey (6)

பொங்கட்டும் பொங்கல்அய்யன் அருள் போல!

இப்பொழுதும் அருளாளர், நாயன்மார் போன்றவர்கள் இருகிறார்களா என்றால் ஆம் இன்றும் உள்ளார்கள்.  அவர்தம் பக்தியை அந்த ஈசன் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்றல்  அது மிகையாகாது அய்யனே .

நான் பக்தன் என்று சொன்னால் அதை ஆண்டவன் அல்லவா ஆமோதிக்கவேண்டும்.

அம்மன்கோயிலில் உறையும் பத்திரகாளியாகிய 'ஆத்தா' மிகவும் தயைகூர்ந்த அருளுடன்  பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு அனைவரும் அறிந்ததே.  நடு இரவில் ஆத்தா கோயிலிலிருந்து வெளியில்வந்து உலாவுவதுண்டு.  சமீப காலம் வரை கோயிலின் எல்லைவரை வந்ததும் பாதசாரிகள் காலணிகளை கையில் எடுத்துக்கொண்டு எல்லை தாண்டியதும் காலில் அணிவது சமீப காலம்வரை பழக்கத்தில் இருந்ததாம்.

இப்பொழுது பூசை செய்யும் பூசாரி காளிதாசு ஆத்தாவின் அருளால் பிறந்தவர் அல்லவா?  ஆத்தாவின் தனிப்பட்ட அன்புடனும், பாசத்துடனும் பூசை செய்துவருவது சிறப்பாகும். பத்திரகாளியாதலால் கோறைப்பற்கள்  தாங்கிய சிலைவடிவமாக இருந்தாலும் அலங்காரம் செய்யும்பொழுது பூசாரி சிரித்த முகத்துடன்தான் ஆத்தாளை நமக்கு தெரியப்படுத்துவார்.  ஒருமுறை எங்களின் ஒருவரின் மகன் தொழில்படிப்பு தேர்வு எழுதுவதாக இருந்தான்.  தேர்வும் எழுதினான்.  ஆத்தாளிடம் அவன் தேர்வில் தெர்சியடைவனா இல்லையா என்று பூப்போட்டு பார்த்தோம்.  அதாவது ஓதிமலையில் உள்ள வழக்கம் போல் மலர்களை தலையுச்சியில் வைத்தோம்.  வலதுபக்கம் விழுந்தால் தேர்ச்சி என்றும் இடதுபக்கம் விழுந்தால் தேர்ச்சியில்லை என்பதும் முடிவு.   அந்த மிகவும் கடினமான தேர்வில் தேர்ச்சியடைய அந்த பையனின் தந்தை ஆத்தாளை மிகவும் மன்றாடி வேண்டினார் .

ஆத்தாளின் அருள்நிலையை அடுத்து பார்ப்போம் ..
https://www.facebook.com/groups/othimalaikamukkam/

வெள்ளி, 9 ஜனவரி, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ரு ) Othimalai Devine Secrets and its Devine Journey (5)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ரு  )
Othimalai Devine Secrets and its Devine Journey (5)

சிவ சிவ

அன்று சீர்காழி பிள்ளையார், மயிலையில் இறந்துபோன பெண்ணின் எலும்புத்துகலை  (அஸ்தியை)  கபாலீச்சுரன் சந்நிதியில் வைத்து கயிலை நாதனை இறைஞ்சி பூம்பாவை என்ற பெண்ணை உயிருடன் மீட்டு கொடுத்தார் என்பது வரலாறு.

இப்போது சிரவண புறீச்சுரராக  குழந்தையை கொடுத்த நிகழ்வுக்கு வருவோம் - அன்று அவிநாசியில் ஆற்றில் விளையாடிய குழந்தையை முதலை  கொண்டு சென்றது. மூன்று ஆண்டுகள் கழித்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசியப்பரை உரிமையுடன்  "முதலை வாய் குழந்தையை மீட்டுத்தர பணி " என்றதும்  அய்யன் அருளால் அப்பாலகன் உயிருடன் மீண்டுவந்தான் இதுவும் இத்தள அருள் வரலாறாகும்.

இப்பொழுது சரவணப்பட்டி ஈசனாக இராமசாமியின் மகனை காலனிடமிருந்து மீட்டுகொடுத்த சம்பவம்.

இதை நாம் ஏன் பேசுகிறோம் என்றால் அந்த இறைவன் இன்றளவிலும் அன்பர்களுக்கு அருள்கின்றானா என்ற ஐயம் எழாவண்ணம் இருபதற்குதான்.  நம்முடன் இறைவன் இருக்கிறான் என்பதை முழுமையாக நம் அனைவருள்ளும் உறைகிறான் என்பதை உணர்தல் வேண்டும் அல்லவா !.  திருமூலநாயனார் ஒரு ஆண்டுக்காலம் தியானத்தில் இருந்துவிட்டு வந்து ஒரு அருட்பாடல் எழுதுவார்.  அப்படி ஒவ்வொரு பாடலையும் திருவாய் மலர்ந்து அருளியதால் அது "திருமந்திரம்" ஆயிற்று .    திருமூலநாயனார் பாடிய பாடலில்  1786-வது பாடல்:-

       " உணர்வுடை யார்கட் குலகமுத் தோன்றும்
         உணர்வுடை யார்கட் குருது யரில்லை
         உணர்வுடை யார்கள்  உணர்ந் தவக்காலம்
         உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே "

இறைவன்  எங்கும் நீக்கமர நிறைந்திருக்கிறான்; என்பதை
அருணகிரிநாதரும்   "ஊனும் உயிருமாய் " இருக்கிறார் என்று பறைசாற்றுகிறார்  ஒதிமலைப்பாடலில்.

ஆகையினால் நாம் இறைவனை நம் உள்ளும் வெளியிலும் எல்லாவற்றிலும், எல்லா உயிரிடத்திலும், எல்லாரிடத்தும் உறைவதை உணர்வோம்.

இனி அம்மன் கோயிலிலி உறையும் ஆத்தாளை பற்றி பார்ப்போம் ..பயணம் அய்யன் அருளுடன் தொடரும் ..
https://www.facebook.com/groups/othimalaikamukkam/
https://www.facebook.com/groups/othimalaikamukkam/493338774139249/?notif_t=like

வெள்ளி, 2 ஜனவரி, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ச ) Othimalai Devine Secrets and its Devine Journey (4)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ச )
Othimalai Devine Secrets and its Devine Journey (4)
கொங்குநாட்டு தமிழ் கேட்க மிகவும் இனிமையாக இருப்பதாலோ என்னவோ அங்கு முருகவேல் அதிகமாக கோயில்கொண்டு அருள்கின்றார்.
"அம்மணி " என்று அழைத்து ஒரு யோகியை அந்த கிராம மக்களுக்காக அளித்தார் அல்லவா?
இப்போது அந்த ஈசனுடைய மற்றொரு திருவிளையாட்டை பார்ப்போம். இதுவும் நிகழ்ந்தது சமீபமே. நாயன்மர்களைப்போல் இறைவனிடம் வெறித்தனமாக ஆழ்ந்த பக்தி செலுத்துபவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்களா; அந்த பரம்பொருளான ஈசன் இப்போதும் வந்து அருள்பாலிக்கின்றானா என்ற ஒரு ஐயம் எழுவதுண்டு அல்லவா!
உண்மையான, தீவிரமான பக்தர்கள் இன்னமும் இருகிறார்கள் ஈசனும் அருள்பாலித்துக்கொண்டுதான் இருக்கின்றார்.
சரவணப்பட்டியில் உறையும் ஈசனையும், அம்மன் கோயிலில் ஆட்சிபுரிந்துவரும் பத்ரகாளி ஆத்தாளையும் பூசை செய்துவருவது "கோ " வம்சத்தில்வந்த இராமசாமி பூசாரியின் குடும்பம் ஆகும் .
குழந்தை இல்லாதிருந்து ஆத்தாளிடமிருந்து கேட்டார் ஒரு குழந்தையை. ஆத்தாள் மனமிரங்கி ஒரு ஆண் மகவை கொடுத்தார். ஆத்தாளின் அருளால் பெற்றதால் "காளிதாசு" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். குழந்தையும் நன்றாக விளையாடி வளர்ந்து வந்தது. 5ஆம் வயதில் குழந்தைக்கு கடும் குளிர்காய்ச்சல் வந்து மிகவும் பாதித்தது. குழந்தையின் நிலை நாளுக்கு நாள் மிகவும் கவலைக்கிடமாகிக் கொண்டிருந்தது. சரவனப்பட்டியில் வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் இனி எங்களால் எதுவும் செய்வதற்கில்லை, வேறு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறிவிட்டனர். இராமசாமி குடும்பத்தினர் மனம் நொந்து கோயம்புத்தூர் அழைத்துபோய் மருத்துவம் பார்த்தனர்
அங்கு நிலைமை மிகவும் சீர்கேடுற்றதால் பெரிய பொது மருத்துவமனை மருத்துவர்கள் இனி எங்களால் ஒன்றும் இயலாது வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுங்கள் என்று கூறி போகசொல்லிவிட்டார்கள். ஆம் உண்மையாகவே குழந்தையை எடுத்து போட்டுகொண்டு வந்தார்கள். அன்று ஈசனுக்கு உகந்த நாள். மக்கள் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆலகால நஞ்சை எடுத்து உண்ட நாள் அதாவது திருநீலகண்டன் ஆன நாள் (குறையில்லா நாள் - பிரதோசம்). சிரவணமாபுரீச்சுரர் ஆலையத்தில் பக்தர்கள் வரதுவங்கிவிட்டார்கள் இராமசாமி பூசாரிதான் பூசை செய்யவேண்டும். குழந்தையை கோயிலில் இருள் சூழ்ந்த ஒர் மூலையில் கிடத்தி போட்டுவிட்டு பூசைக்கு களங்கம் வராத வகையில் மூடிவிட்டு அய்யனுக்கு பூசையை செய்ய வந்துவிட்டார். காலனை காலால் உதைத்த ஈசனின் கோயில் வளாகம் அல்லவா அது. சரவனப்பட்டியின் அருகில்தான் இயமனுக்கு சக்தியருளிய திருத்தலம் "காலகொலேசுவரர்" உறையும் கோயில்பாளையம் உள்ளது.
பூசாரி அய்யனின் பூசையில் ஆழ்ந்தாலும் ஒரேமகன் அதுவும் தவம்கிடந்து பெற்றது அல்லவா! மனம் துக்கத்தில் திருமுழுக்கு செய்துகொண்டே வேண்டினார் பூசாரி இராமசாமி. "உனக்கு, எனக்குப்பின் மணியடிக்க இந்த வம்சத்தில் ஆள் இல்லை ஆதலால் உனக்கு பூசை செய்ய ஆள்வேண்டுமானால் குழந்தையை கொடு என்று வேண்டினேன் என்றார் பூசாரி எங்களிடம். திருமுழுக்கு அனைத்தும் முடிந்தது, அலங்காரமும் ஆகிவிட்டது, தீபாராதனை செய்தார் இராமசாமி, என்ன வியப்பு "மணி ஒளி" கேட்டு திரும்பிப்பார்த்தார் பூசாரி அங்கு மணி அடித்துகொண்டிருந்தான் "காளிதாசு" . பூசாரிக்கு இறைவன் தெரியவில்லையாம் கண்களில் நீர் மறைத்து விட்டதாம். உங்களுக்கும் இதுபோல் எதாவது நிகழ்ந்திருக்கும் , எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இறைப்பேராற்றலின் அருள்தன்மை எல்லோருக்கும் தெரியட்டும் .
... பயணம் தொடரும்